Sunday, November 6, 2011

சாதிக்கலாம் வாங்க

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

என்ற கவிராஜனின் கந்தக வரிகளுக்கு ஏற்ப உள்ளத்தில் எந்த அச்சமும், பயமும் இன்றி ஜம்மு காஷ்மீரில் ஐ.பி.எஸ்.ஸாகப் பணியாற்றும் அஜிதா பேகம் சுல்தான் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண்.
அஜிதா பேகம் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். இவருடைய அப்பா சுல்தான் கோவையில் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். அஜிதாபேகம் நிர்மலா பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 78 விழுக்காடு மதிப்பெண்களும், பிளஸ் 2 வில் 94 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். பள்ளிப்படிப்பைப் பற்றி அவர் கூறுகையில் “நான் ஸ்கூல் படிக்கும்போது ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்கும்போது ‘டாக்டர், இன்ஜினியர்னு பலரும் என்னன்னெவோ சொல்லுவார்கள். அப்போ எனக்கு மட்டும் என்ன சொல்றதுன்னே தெரியாது அந்த அளவுக்கு சின்ன வயதில் என் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு கனவும் இல்லாமல் தான் இருந்தேன்” என்றார்.
பின்னர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கோவை அவினாசிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் பி.பி.எம் (Dual Degree) படித்தபோது பல்கலைக்கழ அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். அப்போதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றியெல்லாம் எந்தக் கனவும் இல்லை என்றவரிடம், பின்னர் எப்படி ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டதற்கு, “பொதுவாக எங்கள் சமுதாயத்தில் பெண்களுக்கு விரைவாக திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். என் வீட்டிலும் அப்படித்தான் எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எண்ணம். ஆனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. இதை என் அப்பாவிடம் கூறினேன். அப்பொழுது என் அப்பாவின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் தான் என்னை ஐ.ஏ.எஸ். படிக்க ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைக்குப் பின்னர் ஐ.ஏ.எஸ். பயிற்சியளிக்கும் பேராசிரியர் கனகராஜ் அவர்களிடம் சேர்ந்தேன். அவர் கொடுத்த பயிற்சிதான் எனக்கு வாழ்க்கையில் நிறையக் கற்றுத்தந்தது. ஒரு இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் முயன்று அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றவரிடம் தினமும் எப்படிப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு, “தினமும் 13 மணிநேரம் படிப்பேன். ஒரு இலட்சியத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதை நோக்கி ஒட்டுமொத்த உழைப்பையும் செலுத்தினால்தான் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தேன். எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதே அப்போது நான் கற்ற பாடம். எனக்கு சீனியரான சக்தி பழனி IPS, அவர்களின் உதவியால் புவியியலும், பேராசிரியர் கனகராஜ் அவர்களின் உதவியால் அரசியல் அறிவியல் பாடமும் நன்கு கற்றேன். அவர்களின் உதவியால் பிரிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் விடாப்பிடி உறுதி, கடின முயற்சியுடன் மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று 169 வது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் என்ற பெருமையைப் பெற்றேன்” என்றவர், ஜம்மு-காஷ்மீரில் போஸ்டிங் போடப்பட்டதைப் பற்றி நினைவு கூறுகையில், “நான் தேர்வு செய்யப்பட்டது ஜம்மு-காஷ்மீர் கேடர். ஐதராபாத்தில் டிரெய்னிங். அங்கு இயக்குனராக இருந்தவர் விஜயகுமார் IPS, இணை இயக்குனராக இருந்தவர் சாஸ்திரி IPS, இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். டிரெயினிங் முடிந்து பணி ஒதுக்கீடு செய்யும்போது தான் எனக்கு ஜம்மு-காஷ்மீர் என்பதை இயக்குனர் கூறினார். கோவையிருந்து காஷ்மீருக்கு பயணம் என்றவுடன் ஒரு அதிர்ச்சி. பின்னர் நான், ‘மோதுங்கள், பயத்துக்கு எதிராக மோதுங்கள்’ என்ற வரியை நினைத்துக் கொண்டேன். அந்த வரிகள் எனக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது என்றவரிடம், எப்படி பயிற்சி இருந்தது என்று கேட்டதற்கு, “நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றபோது பேஸ்கட் பால் பிளேயர். அதனால் எனக்கு அந்தப் பயிற்சிகள் பெரிய அளவில் கடினத் தன்மையாகத் தோன்றவில்லை. தினமும் 4, 5, 6 கி.மீ. என ஓட்டப் பயிற்சி மேற்கொள்வோம். ஒரு சமயம் ஆறரை கி.மீ. மராத்தான் ஓட்டத்தில் மூன்றாவதாக வந்து பரிசு பெற்றேன். பயிற்சியில் நீச்சல், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், பலவிதமான போர்க் கருவிகளைக் கையாளுவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது” என்றவரிடம், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் எப்படி தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு,
“எல்லா விசயங்களிலும் அப்டேட்டாக இருங்கள். பிரிமினரி தேர்வுக்கு NCERT Book-ஐ படியுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யுங்கள். மற்றவரின் கட்டாயத்திற்காகவும், எளிமையாக இருக்கிறது என்பதற்காகவும் தேர்வு செய்யாமல் உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்யுங்கள். எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக
இருங்கள். இல்லையென்றால் நீங்கள் எல்லாப் பாதைகளிலும் பயணிக்க முயலுவீர்கள். அது உங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தும். நன்றாகத் திட்டமிடுங்கள். சிறிதளவும் அதிருந்து விலகாதீர்கள். உங்கள் லட்சியம், திட்டம், முயற்சி, உழைப்பு எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துங்கள். நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையைக் கடைபிடித்தால் நிச்சயம் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தான்” நேர்முத் தேர்வை எப்படி அணுக வேண்டும் என்று கூறும்போது, “நேர்முகத் தேர்வில் நாம் எப்போதும் உண்மைத் தன்மையுடன் பதிலளிக்க வேண்டும். தெரியாத விசயத்தைப் பற்றி கேட்டால் தெரியாது என்றே பதிலளிக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. நமக்கு முழுமையாகத் தெரியாத விசயத்தில் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்படும்போது அங்கு இருக்கும் அதிகாரிகள் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் பத்து கேள்விக்குமே பதில் தெரியவில்லை என்றாலும் தெரியாது, தெரியாது என்றே உண்மையைக் கூறுங்கள். சில பேர் தனக்குத் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்பட்டுதான் தோல்வியடைகின்றனர் என்றவர், தற்போது ஏ.எஸ்.பி.யாக ஜம்மு சிட்டி ஈஸ்ட் ஜோன்-ல் பணிபுரிகிறார்.
சவால்தான் வாழ்க்கையின் அடிப்படை. பெரிதாகக் கனவு காணுங்கள். அதன்பிறகு அந்தக் கனவை நனவாக்குவது எப்படி எனத்திட்டமிட்டு, விடாமுயற்சியோடு கடுமையாகவும், மன உறுதியுடனும் உழைத்தால் உலகில் முடியாதது எதுவுமில்லை. முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன் என்னால் முடிந்தது உங்களாலும் நிச்சயம் முடியும்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும். அதில் தோல்வியுற்று அடுத்த முறை முயற்சி செய்வது கூடாது என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டு, வேகம், ஆர்வம், துடிதுடிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அஜிதா பேகம் ஐ.பி.எஸ். டிரெயினிங்கில் பெஸ்ட் லேடி அத்தலெட்டாக தேர்வு செய்யப்பட்டவர். 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், குண்டு எரிதல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டதுடன் best lady outdoor at passing out parade ஆக தேர்வு செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களிடம் பரிசு பெற்றவர்.
கடின உழைப்பு, உள்ள உறுதி என்ற இறகுகளைக் கொண்டு சாதித்த அஜிதா பேகம் சுல்தான் மேலும் பல சாதனைகளைப் புரிய தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment