Friday, November 18, 2011

நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக.


நம் வீட்டில மட்டுமல்ல, நம்ம நாட்டில மட்டுமல்ல, உலகில் எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நுழைவாயில் தான். 'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்' என்பது வெறும் பேச்சுத்தான். வீட்டுக்கு வீடு சென்று பார்த்தால் தான் தெரியும், 'குடும்பம் ஒரு குழப்பக் கழகம்' என்று... குழப்பக் கழகத்தைப் பல்கலைக் கழகமாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பார்க்கவும்.
1-ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றல்.
2-ஒருவர் சொல்லை ஒருவர் கேட்டல்.
3-ஒருவர் செயலுக்கு ஒருவர் உதவணும்.
4-ஒருவர் கருத்தை ஒருவர் பொருட்படுத்தணும்.
5-குடும்பம் என்ற வட்டத்திற்கு உள்ளேயே இருக்கணும்.
6-அண்டை அயலை அணைக்க வேண்டும்.
7-நேற்றைய வழிகாட்டலை மீறாமல் இன்றே நிறைவாய் வாழ்தல்.
8-நாளை என்ற நாளை உள்ளத்தில் இருத்தி நாளைக்கு வாழத் தேவையானதை சேமிக்கணும்.
9-சுகம் காண வேண்டிய இன்றைய வாழ்வை, நாளைக்கு வாழலாம் என்று தள்ளிப் போடாதே!
10-எதற்கும் "நேரமில்லை" என்று பதில் கூறாமல், 24 மணி நேரத்தையும் திட்டமிட்டுப் பாவிக்கணும்.
இந்தப் பத்தை விட, இன்னும் பல எழுதலாம். இந்தப் பத்தையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பேணினால் கூட, குடும்பம் ஒரு குழப்பக் கழகம் ஆகாமல் பல்கலைக் கழகமாகப் பேண முடியுமே! வாழ்க்கை என்பது நல்ல குடும்பத்தில் தான் அமைகிறது. நல்ல குடும்பம் அமைய மேற்காணும் பத்தும் உங்களுக்கு வழிகாட்டுமே!

Sunday, November 6, 2011

முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி


உலகின் உயர்ந்த செல்வங்களுள் ஒன்றான திறமையை ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்து வளர்த்துக் கொள்வதில் முனைப்புடன் திகழும்போதுதான் உலகளவில் பேசப்படுபவர்களாக சாதிப்பாளர்களாக மாறுகிறார்கள் என்பதற்கேற்ப ஒவ்வொருவரின் திறமையையும் அற்புதமாக வெளிக்கொணரும் சிறந்த பயிற்சியாளராக, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர்.
மனிதவள மேம்பாட்டில் உலக அளவில் சிறந்து விளங்குபவர்.
சாஃப்ட்வேர், பேஷன் போன்ற பல துறைகளிலும் கால் பதித்து சாதித்து வருபவர், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களைக்கொண்டு வேலையில் அமரப்போகும் மாணவர்களுக்கு Soft Skills, Group Discussion, Manners, Communication Skills Development, Art of Interview Handling மற்றும் Personality Development போன்ற பல சேவைகளை உயர்தர பயிற்சியாளர்கள் மூலமாக அளித்து வருபவர்.
‘விடியல்’ என்கிற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் பயன் அடையும் வகையில் ‘கல்விப்பணி’ ஆற்றி வருபவர்.
‘Innovative Service’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து திறம்பட செயல்புரிந்து வருபவர்.
இப்படி பல்வேறு சிறப்புகளுக்குரிய திரு என். வெங்கடேஷ் அவர்களை டாக்டர் செந்தில் நடேசன் அவர்களுடன் நாம் நேர்முகம் கண்டபோது ‘மனதில் ஒன்றைத் திட்டமிட்டு அதை எப்படியும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்கிற உறுதியுடன் செயல்பட்டு பாருங்கள். வெற்றிக்குரிய மனிதராக ஜொலிக்கமுடியும் என்ற அவரோடு இனி நாம்…
பிறப்பும், படிப்பும்
கோவை துடியலூர் அருகிலுள்ள NGGO காலனியில் பிறந்தேன். ஆரம்பக் கல்வியை கான்வென்டிலும், பிறகு ராமலிங்கம் செட்டியார் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்புவரையும், டநஎ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலையும் (B.Sc. இயற்பியல்) படித்தேன்.
இளங்கலை முடித்தவுடன் 6 மாதம் பகுதிநேரப் படிப்பாக ஹார்டுவேர் படிப்பை முடித்தவுடன் கம்ப்யூட்டர் சர்வீஸ் கம்பெனியில் 6 வருடங்கள் பணிபுரிந்தேன். பிறகு சுயதொழிலில் ஈடுபட்டேன்.
சுயதொழிலை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?
6 வருட பணிக்குப்பின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்ற எண்ணம் வந்தது. எல்லோரும் அரசு வேலை செய்ய வேண்டுமென்று விரும்பிய நேரத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டுமென்று நினைத்தேன்.
என் அப்பா நாராயணசாமி காவல்துறையில் பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். எனக்குள்ளும் சிறுவயதில் காவல்துறை அதிகாரியாக வரவேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், வளர வளர சுயதொழிலின் மீதே ஆர்வம் அதிகம் ஆனது.
நீங்கள் சுயதொழில் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தபோது “மூலதனம்” ஒரு பிரச்சனையாக இருந்ததா?
இல்லை. மூலதனமென்ற ஒன்று இல்லாமல் தொடங்கப்பட்ட தொழில் என்பதுதான் எனது சுயதொழிலின் பலம் என்பேன். என் வேலையில் கிடைத்த அனுபவத்தை வைத்து மூலதனமே இல்லாமல் தனிநபராக இருந்து தொழிலை துவங்கினேன்.
சுயதொழிலில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்தீர்கள்?
முதன்முதலில் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீசஸ் தொழிலை ‘சிஸ்மேன்டெக்’ (Sysmantech) எனும் பெயரில் 1997ம் ஆண்டு துவக்கினேன். அப்போது கம்ப்யூட்டர்களுக்குத் தேவை இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து 15 வருடங்களாக இன்றளவும் நல்லமுறையில் செய்து வருகிறோம்.
‘Innovative Services’ எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? இந்த நோக்கம் உங்கள் மனத்தில் எழக்காரணம்?
2007ம் ஆண்டு தான் முதன் முதலில் துவக்கினேன். மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஆர்வமிருந்ததே காரணம் ஆகும். என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட விஷயங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினேன். முதலில் பலருக்கு வேலை வாங்கித் தருவது என்று தான் துவக்கினேன். Man Power Requirement-க்கு அடிப்படையே கல்லூரிதான். அதனால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினோம். வேலைவாய்ப்புத் திறன்கள் (Employment Skills) என்ற’ஒன்றை உருவாக்கி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். ஒருவருக்கு வேலை வாங்கித்தருவது ஒரு குடும்பத்தையே காப்பாற்றுவது மாதிரி என்று துவக்கினோம். நேர்முகத் தேர்வு, வேலைக்குச் செல்லுமிடத்தில் அவர்கள் எப்படி இருக்க வேண்டும், அலுவலகச் சூழல்கள் இப்படி பல விதங்களில் பயிற்சிகளை அளித்தோம். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 150 கல்லூரிகளில் இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். 30 கல்லூரிகளில் வழக்கமாக ‘MOU’ ஒப்பந்தத்தின் மூலமாக 8,000 முதல் 10,000 மாணவர்களைப் பெற்று, அவர்களுக்கு 2 முறைகளில் பயிற்சியளிக்கிறோம். ஒன்று நேர்முகத் தேர்வு குறித்த அனைத்துப் பயிற்சிகள் மற்றொன்று ‘Aptitude’ என்னும் கணிதம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
ஆரம்பத்தில் ”Innovative Services’க்கான கல்லூரிகளைத் தொடர்பு கொண்ட போது உடனே வாய்ப்பு கிடைத்ததா, இல்லை அதற்காக போராட வேண்டியிருந்ததா?
ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்லூரியின் அடிப்படையே மாணவர்கள் எப்படி நல்ல இடத்தில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அதற்காக நாங்கள் பயிற்சி கொடுக்க முன்சென்றதால் நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது.
மாணவர்களின் திறமை இப்போது எப்படியிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஏறத்தாழ 100க்கு 80 சதவிகிதம் மாணவர்கள் இந்தப் போட்டி நிறைந்த உலகில் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வரும்போதே தெரிந்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் அவர்களால் அதை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு அனைத்தும் தெரிகிறது. ஆனால் கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சற்று குறைவாக தெரிந்திருக்கிறது. மொழி ஒரு பிரச்சனையாகவே உள்ளது. ஆகவே அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மேலும் அவர்கள் நினைப்பதை வெளிப்படுத்தி நல்லமுறையில் செயல்படுமளவிற்குப் பயிற்சியளிக்கிறோம்.
உங்கள் ”Innovative Services’ குழுவின் சிறப்பு குறித்து?
எங்கள் குழுவில் மொத்தம் 150 பேர் உள்ளனர். அனைவருமே நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். கல்லூரி மற்றும் மொழியைப் பொருத்து தேவையான பயிற்சியாளர்களை அனுப்பி வைக்கிறோம். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் 300 பேருக்குப் பயிற்சியளித்து அனைவரும் வேலையில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிகள் அல்லாமல் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பயிற்சி வேண்டுமென்று வருபவர்களுக்கு நீங்கள் எந்த வகையில் உதவுகிறீர்கள்?
‘Public Workshop’ மூலமாக தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறோம். கல்லூரி மாணவர்களும் இங்கு வருவது வழக்கம். சிறப்பு வகுப்புகள் மூலமாக ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள எங்கள் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கிறோம்.
இப்படிப்பட்ட பயிற்சி முறைகளை தர உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?
எல்லாம் அனுபவம்தான். நான் கேட்டது கண்டதில் தேவையானது தேவையில்லாதது எது என்பதையறிந்து பயிற்சியளிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். மேலும் டெல்லி, மும்பையில் நடக்கிற ‘International Level Training’ல் கலந்து ள்பயிற்சிகளைப் பெறுகிறேன்.
உலக அளவில் நமது நாட்டில் மனிதவள மேம்பாடு எப்படியுள்ளது, இன்னும் எந்த அளவு வளர வேண்டுமென நினைக்கிறீர்கள்?
மனிதவள மேம்பாடு குறித்து கம்பெனிகளுக்கு இடையில் நல்ல அளவில் விழிப்புணர்வு இருந்து வருகிறது. மனிதவள மேம்பாடு கல்லூரிகளிலிருந்தே தொடங்க வேண்டும். மனிதவளம் என்பது கூட்டமைப்புத் தொடர்பு தான். ஓரிடத்தலிருந்து மற்றொரு இடத்தில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு கூட்டு முயற்சி செய்வது. இன்னும் வளர நிறைய உள்ளது.
மனிதவள மேம்பாட்டில் இன்னும் எந்தப் பிரிவில் வளர்ச்சி வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
பொது அறிவு என்பது முக்கியம். நகர மாணவர்கள் இதனை சுலபமாக பெற்றுக்கொள்கின்றனர். அதேசமயம் கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு இன்னும் அதிகம் தேவையாக இருக்கிறது. அதனால் அவர்களை அத்துறையில் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். மேலும், பள்ளி அளவிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இவற்றை இலவசமாக கொண்டு செல்லவேண்டுமென்று முயற்சிக்கிறோம்.
கோவையில் ”Public Workshop’ செயல்பாடுகள் குறித்து?
ஹோட்டல்களில் செய்திருக்கிறோம். உளவியல் பயிற்சிகள் (Psychological Training) கொடுத்திருக்கிறோம். கோவை சிறைத்துறை I.G. திரு. கோவிந்தராஜ் அவர்களின் உதவியுடன் 250 சிறைக்காவலர்களுக்குப் பணியில் சேர்வதற்கு முன் பயிற்சியளித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.
மனஅழுத்தம் இன்று பெரும் பிரச்சனையாக எழக்காரணம்?
எந்த ஒரு சிறிய பிரச்சனை வந்தாலும் அதை மனதில் போட்டுக் குழப்பி, பெரிதுபடுத்தி நம்பகமானவர்களுடன் பகிர்ந்தளிக்காமல் இருக்கும்போது அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. சம்பாத்தியம் என்பது ஆண் பெண் இருவருக்கும் இக்காலத்தில் மிக அத்தியாவசியமானது. தன்னால் சம்பாதிக்க முடியவில்லை என்ற இயலாமை வரும்பொழுது மற்றும் தேவையில்லாத யோசனைகள், எதிர்பார்ப்புகள் காரணமாகவும் மனஅழுத்தம் கூடுகிறது.
கோவையில் கார்பரேட் கம்பெனிகள் அதிகம் இல்லாமைக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
தயக்கநிலைதான் காரணம். ‘Modernised Education’ ஐ.டி. கம்பெனிகளின் வருகை எதிர்வரும் காலத்தில் கோவையில் கார்பரேட் கம்பெனி சிஸ்டத்தை கொண்டு வந்துவிடும் என்கிற நம்பிக்கை உள்ளது.
உங்களின் இதர சமூகப்பணிகள் குறித்துச் சொல்லுங்களேன்…
‘விடியல்’ என்ற ஓர் அமைப்பை 3 வருடங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளோம். இதில் ஒரு கணிசமான தொகையை விருப்பப்பட்டோரிடமிருந்து பெற்று அதை மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாத நலிவடைந்த குழந்தைகளுக்குமாய் கொடுத்து உதவுகிறோம்.
விடியலைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?
ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து கஷ்டநஷ்டங்களைத் தெரிந்து வளர்ந்ததால் நமக்குக் கீழிருக்கும் மக்களின் கஷ்டங்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம்தான் காரணம். கஷ்டப்படும் அனைவருக்கும் உதவ முடியவில்லையென்றாலும் இயன்ற அளவு உதவி வருகிறோம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்பொழுது மொழிப்பிரச்சனை ஏதாவது?
ஆங்கிலம் பொதுவாக இருப்பதால் பிரச்சனைகள் பெரிதாக இல்லை. அப்படி மொழிப் பிரச்சனை இருந்தாலும் அந்த மொழியைத் தெரிந்த எங்கள் குழுவின் பயிற்சியாளர்களை வைத்து விஷயங்களை விளங்க வைக்கிறோம்.
பெரிய MNC கம்பெனிகளுக்கு ஆங்கிலம் அவசியமாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களை அதற்கு எப்படி நீங்கள் தயார் செய்கிறீர்கள்?
கிராமப்புற மாணவர்களுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமுள்ளது. ஆனால் ஆங்கிலம் பேசுவதுதான் பிரச்சனையாக உள்ளது. தொடர்ந்து ஆங்கிலம் பேச பல்வேறு பயிற்சிகளைக் கொடுக்கிறோம். பயிற்சி புத்தகங்களின் மூலமாக ஆங்கிலம் பேச (Spoken English) கற்றுக் கொடுக்கிறோம்.
கல்லூரிகளில் உங்களின் பயிற்சி முறைகளை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள்?
முதலில் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். முதலாமாண்டில் இளம் சாதனையாளர்களை அழைத்து அவர்கள் அனுபவத்தையும், சாதனையையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கிறோம். இரண்டாமாண்டில் ஆங்கிலப் பயிற்சி. மூன்றாமாண்டில் ‘Aptitude Test’ மற்றும் இறுதியாண்டில் நேர்முகத் தேர்வு திறன்கள் (Interview Skills) அனைத்தையும் கற்பிக்கிறோம்.
கல்லூரிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தும் தனியார் நிறுவனங்களை கல்லூரிகள் ஆதரிக்கக் காரணம்?
தினமும் பார்க்கும் ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கவனமாக எடுப்பதில்லை என்பதும், வெளியிலிருந்து வந்து சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொழுது அதில் ஈர்ப்புடனும், ஈடுபாட்டுடனும் கவனம் செலுத்துகிறார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.
உங்கள் நிறுவனத்தில் உள்ள பயிற்சியாளர் களுக்குப் பயிற்சி என்பது எப்படி?
பயிற்சியாளர் மேம்பாட்டு பயிற்சிகள் (Train-the-Trainer Training Program) மூலமாக மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டுமென்பதை முதலில் கற்றுக்கொடுக்கிறோம். மேலும் எங்கள் அனைத்து குழுக்களும் 20, 30 வருடங்கள் கல்வித்துறையில் அனுபவமிக்கவர்களாக உள்ளனர்.
Placement Service குறித்த நம்பகத்தன்மை அவ்வளவுக்காக மக்களிடையே இல்லாமல் இருக்கிறதே அது குறித்து தங்கள் கருத்து?
நீங்கள் சொல்வது இருக்கிறது. நாங்கள் இச்சர்வீஸை ஒரு சேவை மாதிரிதான் செய்து வருகிறோம். வேலை கிடைத்த பிறகு மட்டுமே ரூ.1000 பெற்றுக் கொள்கிறோம். கிராமப்புற மாணவர்களிடம் எத்தொகையும் பெறுவதில்லை.
ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிற நிலையில் ஊழியர்களுக்கு நீங்கள்தரும் ஏத பழ்ஹண்ய்ண்ய்ஞ் என்பது எவ்வண்ணமாக?
கம்பெனிகளில் ‘Interpersonal Relationship’ குறித்து நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். முதலாளி – தொழிலாளி உறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். நிர்வாகத்தில் உள்ள குறைகள் குறித்து ‘தங்ல்ர்ழ்ற்’ ஒன்றை நிர்வாகத்திடம் அளிக்கிறோம். முதலாளிகள் அதனை கருத்திலெடுத்து பரிசீலிக்கின்றனர்.
வெளிநாட்டு பயிற்சி முறைகளுக்கு வரவேற்பு என்பது நம்நாட்டில் எந்தளவில் உள்ளது?
ஆரம்ப நிலைகளில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஓரளவு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்றாலும் வெளிநாட்டுப் பயிற்சி முறைகளை விட நம்நாட்டு பயிற்சி முறைகள் தான் சிறந்தது. கூடுதல் தகுதியைக் காட்டுவதற்காக வேண்டுமானால் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள பயிற்சி முறைகளை அறிந்து வந்து கற்றுத்தரலாம்.
ஒரு தலைமைக்குறிய தகுதிகள் பண்புகள் என்று நீங்கள் குறிப்பிடுவது?
விட்டுக் கொடுத்து போவது ஒன்று மட்டும் இருந்தால் போதும். ‘Compromising Mentality’ எப்போதும் முக்கியம். உஞ்ர் பார்க்காமல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
நீங்கள் படித்ததில் உங்களை பாதித்த புத்தகம் எது?
ஷிவ் கெரா-வின் ‘யூ கேன் வின்’ (You Can Win).
எதிர்கால இலக்கு?
ஒரு சர்வதேச பயிற்சி நிறுவனமாக (International Training Centre) நிறுவனத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய இலக்கு.
உங்கள் குடும்பம் குறித்து?
மனைவி சுசித்ரா, மகள் ஸ்வேதா, மகன் விஷால்
உடல் ஆரோக்கியத்திற்கு உற்சாகமான செயல்பாட்டிற்கும் நீங்கள் பின்பற்றுவது? 
அதிகாலையில் எழும் பழக்கமும், தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வதும் நம் மனதை ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்கும் என்பதை உணர்ந்து நாளும் செயல்படுகிறேன். அந்த வகையில் எல்லோரும் பயன்பெற கோவை சாய்பாபா கோவிலில் ‘Maverick Fitness Centre’ ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். கடந்த வருடம் ஒரு மாரத்தான் நடத்தினோம். கிட்டத்தட்ட 8000 பேர் கலந்துகொண்டனர். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என தொடங்கினோம்.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
முடியும் என்கிற தொடர் முயற்சியே நிச்சயம் வெற்றியைத் தரும்.
தடைகளைத் தாண்டிய அனுபவம்?
தடைகள் எல்லோருக்கும் வரும். சோர்வடையாமல் அதிலிருந்து மீண்டுவர வேண்டும். பொருளாதார ரீதியாக நிறையத் தடைகளை எதிர்நோக்கியுள்ளேன். அதிலிருந்து சரியான முடிவுகளையெடுத்துச் சரி செய்துள்ளேன்.
தன்னம்பிக்கை குறித்து உங்களின் எண்ணம்?
100% இருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அடிகூட முன் வைக்க முடியாது. தன்னம்பிக்கையிருந்தால் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் எழுந்து விட முடியும். தன்னம்பிக்கை இதழில் பலரும் பயனுள்ள கட்டுரைகளை அருமையாகத் தந்து வருகிறார்கள். மாதந்தோறும் தவறாமல் வாங்கி படித்து வருகிறேன்.

முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி


சாதிக்கலாம் வாங்க

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

என்ற கவிராஜனின் கந்தக வரிகளுக்கு ஏற்ப உள்ளத்தில் எந்த அச்சமும், பயமும் இன்றி ஜம்மு காஷ்மீரில் ஐ.பி.எஸ்.ஸாகப் பணியாற்றும் அஜிதா பேகம் சுல்தான் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண்.
அஜிதா பேகம் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். இவருடைய அப்பா சுல்தான் கோவையில் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். அஜிதாபேகம் நிர்மலா பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 78 விழுக்காடு மதிப்பெண்களும், பிளஸ் 2 வில் 94 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். பள்ளிப்படிப்பைப் பற்றி அவர் கூறுகையில் “நான் ஸ்கூல் படிக்கும்போது ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்கும்போது ‘டாக்டர், இன்ஜினியர்னு பலரும் என்னன்னெவோ சொல்லுவார்கள். அப்போ எனக்கு மட்டும் என்ன சொல்றதுன்னே தெரியாது அந்த அளவுக்கு சின்ன வயதில் என் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு கனவும் இல்லாமல் தான் இருந்தேன்” என்றார்.
பின்னர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கோவை அவினாசிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் பி.பி.எம் (Dual Degree) படித்தபோது பல்கலைக்கழ அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். அப்போதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றியெல்லாம் எந்தக் கனவும் இல்லை என்றவரிடம், பின்னர் எப்படி ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டதற்கு, “பொதுவாக எங்கள் சமுதாயத்தில் பெண்களுக்கு விரைவாக திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். என் வீட்டிலும் அப்படித்தான் எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எண்ணம். ஆனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. இதை என் அப்பாவிடம் கூறினேன். அப்பொழுது என் அப்பாவின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் தான் என்னை ஐ.ஏ.எஸ். படிக்க ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைக்குப் பின்னர் ஐ.ஏ.எஸ். பயிற்சியளிக்கும் பேராசிரியர் கனகராஜ் அவர்களிடம் சேர்ந்தேன். அவர் கொடுத்த பயிற்சிதான் எனக்கு வாழ்க்கையில் நிறையக் கற்றுத்தந்தது. ஒரு இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் முயன்று அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றவரிடம் தினமும் எப்படிப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு, “தினமும் 13 மணிநேரம் படிப்பேன். ஒரு இலட்சியத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதை நோக்கி ஒட்டுமொத்த உழைப்பையும் செலுத்தினால்தான் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தேன். எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதே அப்போது நான் கற்ற பாடம். எனக்கு சீனியரான சக்தி பழனி IPS, அவர்களின் உதவியால் புவியியலும், பேராசிரியர் கனகராஜ் அவர்களின் உதவியால் அரசியல் அறிவியல் பாடமும் நன்கு கற்றேன். அவர்களின் உதவியால் பிரிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் விடாப்பிடி உறுதி, கடின முயற்சியுடன் மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று 169 வது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் என்ற பெருமையைப் பெற்றேன்” என்றவர், ஜம்மு-காஷ்மீரில் போஸ்டிங் போடப்பட்டதைப் பற்றி நினைவு கூறுகையில், “நான் தேர்வு செய்யப்பட்டது ஜம்மு-காஷ்மீர் கேடர். ஐதராபாத்தில் டிரெய்னிங். அங்கு இயக்குனராக இருந்தவர் விஜயகுமார் IPS, இணை இயக்குனராக இருந்தவர் சாஸ்திரி IPS, இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். டிரெயினிங் முடிந்து பணி ஒதுக்கீடு செய்யும்போது தான் எனக்கு ஜம்மு-காஷ்மீர் என்பதை இயக்குனர் கூறினார். கோவையிருந்து காஷ்மீருக்கு பயணம் என்றவுடன் ஒரு அதிர்ச்சி. பின்னர் நான், ‘மோதுங்கள், பயத்துக்கு எதிராக மோதுங்கள்’ என்ற வரியை நினைத்துக் கொண்டேன். அந்த வரிகள் எனக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது என்றவரிடம், எப்படி பயிற்சி இருந்தது என்று கேட்டதற்கு, “நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றபோது பேஸ்கட் பால் பிளேயர். அதனால் எனக்கு அந்தப் பயிற்சிகள் பெரிய அளவில் கடினத் தன்மையாகத் தோன்றவில்லை. தினமும் 4, 5, 6 கி.மீ. என ஓட்டப் பயிற்சி மேற்கொள்வோம். ஒரு சமயம் ஆறரை கி.மீ. மராத்தான் ஓட்டத்தில் மூன்றாவதாக வந்து பரிசு பெற்றேன். பயிற்சியில் நீச்சல், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், பலவிதமான போர்க் கருவிகளைக் கையாளுவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது” என்றவரிடம், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் எப்படி தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு,
“எல்லா விசயங்களிலும் அப்டேட்டாக இருங்கள். பிரிமினரி தேர்வுக்கு NCERT Book-ஐ படியுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யுங்கள். மற்றவரின் கட்டாயத்திற்காகவும், எளிமையாக இருக்கிறது என்பதற்காகவும் தேர்வு செய்யாமல் உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்யுங்கள். எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக
இருங்கள். இல்லையென்றால் நீங்கள் எல்லாப் பாதைகளிலும் பயணிக்க முயலுவீர்கள். அது உங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தும். நன்றாகத் திட்டமிடுங்கள். சிறிதளவும் அதிருந்து விலகாதீர்கள். உங்கள் லட்சியம், திட்டம், முயற்சி, உழைப்பு எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துங்கள். நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையைக் கடைபிடித்தால் நிச்சயம் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தான்” நேர்முத் தேர்வை எப்படி அணுக வேண்டும் என்று கூறும்போது, “நேர்முகத் தேர்வில் நாம் எப்போதும் உண்மைத் தன்மையுடன் பதிலளிக்க வேண்டும். தெரியாத விசயத்தைப் பற்றி கேட்டால் தெரியாது என்றே பதிலளிக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. நமக்கு முழுமையாகத் தெரியாத விசயத்தில் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்படும்போது அங்கு இருக்கும் அதிகாரிகள் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் பத்து கேள்விக்குமே பதில் தெரியவில்லை என்றாலும் தெரியாது, தெரியாது என்றே உண்மையைக் கூறுங்கள். சில பேர் தனக்குத் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்பட்டுதான் தோல்வியடைகின்றனர் என்றவர், தற்போது ஏ.எஸ்.பி.யாக ஜம்மு சிட்டி ஈஸ்ட் ஜோன்-ல் பணிபுரிகிறார்.
சவால்தான் வாழ்க்கையின் அடிப்படை. பெரிதாகக் கனவு காணுங்கள். அதன்பிறகு அந்தக் கனவை நனவாக்குவது எப்படி எனத்திட்டமிட்டு, விடாமுயற்சியோடு கடுமையாகவும், மன உறுதியுடனும் உழைத்தால் உலகில் முடியாதது எதுவுமில்லை. முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன் என்னால் முடிந்தது உங்களாலும் நிச்சயம் முடியும்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும். அதில் தோல்வியுற்று அடுத்த முறை முயற்சி செய்வது கூடாது என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டு, வேகம், ஆர்வம், துடிதுடிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அஜிதா பேகம் ஐ.பி.எஸ். டிரெயினிங்கில் பெஸ்ட் லேடி அத்தலெட்டாக தேர்வு செய்யப்பட்டவர். 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், குண்டு எரிதல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டதுடன் best lady outdoor at passing out parade ஆக தேர்வு செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களிடம் பரிசு பெற்றவர்.
கடின உழைப்பு, உள்ள உறுதி என்ற இறகுகளைக் கொண்டு சாதித்த அஜிதா பேகம் சுல்தான் மேலும் பல சாதனைகளைப் புரிய தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

அன்பாக இருப்பதுதான் அன்பு

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.
சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.
அன்பு என்பது என்ன ?
பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.
அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.
சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?
நான் சந்தோஷத்தை விரும்புகிறேன்.
கடவுள் அன்பாக இருக்கிறார்.
நான் உன்னை காதலிக்கிறேன்.
என்னுடைய தாயை நேசிக்கிறேன்.
இவையெல்லாம் என்ன...?
அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள். அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?
அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.
கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.
‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.
நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் ?
எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ? நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.
எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது. கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விஷயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.
தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.
நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.
பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த – அதிலும் பதில் எதுவும் பேசி விடாத – ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.
அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?
மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.
காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?
உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.
அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.
இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.
எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு